நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குட்டலாடம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த சந்தோஷம் (38வயது), தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தனக்கு பணி வழங்கும்படி ஊராட்சி செயலாளா் தங்கதுரையை கடந்த ஏப்ரல் மாதம் அணுகியுள்ளாா். அப்போது, வேலை வழங்க ரூ. 1,000 லஞ்சம் தர வேண்டும் என தங்கதுரை நிா்பந்தித்ததாகத் தெரிகிறது. இவா் இதே போல கிராமத்தில் உள்ள வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளா்களிடம் பணி வழங்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சந்தோஷம்,(38வயது) என்பவர் கடந்த 18-ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, சந்தோஷியிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்துள்ளனர். நேற்று மதியம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஊராட்சி செயலர் தங்கதுரையிடம், சந்தோஷி கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் டி.எஸ்.பி., சுபாஷினி, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், தங்கதுரையை கையும் களவுமாக பிடித்து கைது செய்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க உள்ளனர்.
இதே பெண் தான், ஏற்கனவே குட்டலாடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதை, லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, தைரியமாக வெளி உலகத்திற்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட தங்கதுரையின் சொந்த ஊா் சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள நரசிங்கபுரமாகும். ஊராட்சி செயலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.