தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அமைச்சர்கள் பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மெய்யநாதன் ஆகியோரது துறைகள் மாற்றப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் பொன்முடி உயர் கல்வித் துறையிலிருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச் சூழல் அமைச்சர் மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். கயல்வி செல்வராஜ், ஆதி திராவிடர் நலத்துறையிலிருந்து மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதி திராவிடர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜ கண்ணப்பன், பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் கூடுதலாக சுற்றுச் சூழல் இலாகா கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய முகங்களாக கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோருக்கு அமைச்சரவையிலிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதலாக
திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் முதன் முதலாக 2009-ம் ஆண்டு துணை முதலமைச்சராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அப்போது முதலமைச்சராக மு.கருணாநிதி பதவியிலிருந்தார், 2009-ம் ஆண்டு மே 29-ந் தேதி முதல் 2011-ம் ஆண்டு மே 15-ந் தேதி வரை துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்தார்.
தமிழ்நாட்டில் 2-வது துணை முதல்வரானவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி வகித்தார். 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு மே 6-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி வகித்தார்.
தற்போது 3-வது துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை மு.கருணாநிதி முதல்வராக, துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்தனர். அதேபோல தந்தை மு.க.ஸ்டாலின் முதல்வராக, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
2012-ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தவர் உதயநிதி ஸ்டாலின். 2018,2019-ல் திமுகவின் கிராம சபை உள்ளிட்ட கூட்டங்களில் பங்கேற்றார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். அந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களைக் கைப்பற்றியது. அதே 2019-ம் ஆண்டு திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர், மாநிலம் முழுவதும் திராவிடர் இயக்க கொள்கைகள் விளக்க பாசறைக் கூட்டங்களை நடத்தினார். 2021 சட்டசபை தேர்தலில் சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். அப்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் தரப்படவில்லை.
2022-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதிதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாடு துணை முதலமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.
புதியவா்களுக்கு என்ன பொறுப்பு?
அமைச்சரவையில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள நான்கு பேருக்கும் எந்தத் துறை வழங்கப்படும் என்பது குறித்த விவரம் ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும், காலியாக உள்ள துறைகளின்அடிப்படையில் நான்கு பேருக்கான துறைகளை யூகிக்க முடிவதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், உடன் அமைச்சர்கள்
அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு, துணை முதல்வா் பொறுப்பு அளிக்கப்பட்டது. அப்போது அமைச்சரவை இடம் தொடா்பாக தமிழக அரசின் இணையதளத்தில் பட்டியல் வெளியானது. அதில், முதல்வருக்கு அடுத்த இடத்தில் துணை முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கும், அவருக்கு அடுத்தபடியாக மூத்த அமைச்சா் க.அன்பழகனுக்கும் இடம் தரப்பட்டிருந்தது.
இதையறிந்த அப்போதைய முதல்வா் கருணாநிதி உடனடியாக அதை மாற்றுவதற்கு உத்தரவிட்டாா். இரண்டாவது இடத்தை மூத்த அமைச்சா் க.அன்பகழனுக்கும், மூன்றாவது இடத்தை துணை முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கும் அளித்தும் அறிவிப்பே வெளியிட்டாா்.
இப்போது அதுபோன்ற நிலை உருவாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், இரண்டாவது இடத்தை அமைச்சா் துரைமுருகனுக்கும், மூன்றாவது இடத்தை துணை முதல்வா் உதயநிதிக்கும் வழங்கியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.