சென்னையைச் சேர்ந்த சையத் அமான், பதிவுத்துறை தலைவரிடம் அளித்த புகாரில், "தாம்பரம் வரதராஜபுரத்தில் எனக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்தை எனது தந்தை 1980ம் ஆண்டு எழுதி தந்தார். சமீபத்தில் இந்த நிலத்தை இசி செய்து பார்த்தபோது எனது தந்தை, இந்த நிலத்தை காந்தம்மாள் என்பவருக்கு விற்பனை செய்ததுபோல காட்டுகிறது.
எனக்கு எனது தந்தை 1980ம் ஆண்டு எழுதிக் கொடுத்தார். ஆனால் 1987ல் எனது தந்தை, அந்த நிலத்தை காந்தம்மாளுக்கு எழுதிக் கொடுத்ததுபோல ஆவணங்களை தயார் செய்து, போலியாக பதிவுத்துறை ஆவணங்களில் ஏற்றியுள்ளனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ10 கோடி.
ஒரிஜினல் ஆவணங்கள் என்னிடம் உள்ள நிலையில் போலியாக இடைச்செருகல் மூலம் பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, போலியாக பதிவு செய்த ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டிருந்த நிலையில், அனைத்து புகார்களும் உண்மை என தெரியவந்தது. எனவே இது சம்பந்தமான நடவடிக்கையை எடுக்க, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர்ஜிவாலுக்கு பதிவுத்துறை தலைவர் கடிதம் எழுதினார். பிறகு சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதற்கு பிறகே பதிவுத்துறை ஏஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் சொல்லப்படுவதாவது: "தற்போது சேலம் - மதுரை சரக பத்திரப்பதிவு துறை டிஐஜியாக பணியாற்றி வருபவர் ரவீந்திரநாத்.. (56வயது) வயதாகிறது.. சென்னையில் பத்திரப்பதிவு துறை பதிவாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில், பெருங்களத்தூரில் சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலம் போலிஆவணம் மூலம் பதிவுச் செய்யப்பட்டது. இதற்கு ரவீந்திரநாத் உடந்தையாக இருந்துள்ளார்.
அந்த நிலத்தின் உரிமையாளர் கலைவாணி என்பவரது பெயரிலிருந்த உண்மையான பத்திரத்தை திருடி, அதை நகல் எடுத்து அதன்மூலம் போலியாக பத்திரப்பதிவு செய்ததாகவும், அதற்கு உடந்தையாக ரவீந்திரநாத் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த போலி பத்திர விவகாரம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கலைவாணி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரே வரிசை எண் கொண்ட 2 பத்திரங்கள் எப்படி இருக்க முடியும்? இதற்கு பத்திரப்பதிவுத் துறையினர் உடந்தையா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், இதுகுறித்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீஸாருக்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து சிபிசிஐடி பிரிவு போலீஸார், சார் பதிவாளரின் பெண் உதவியாளர் உட்பட 5 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். அவர்கள் அனைவருமே இப்போது ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனர். பெண் உதவியாளர் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, சேலம் விரைந்த சென்னை சிபிசிஐடி பிரிவு தனிப்படை போலீசார், அங்கு பதிவுத்துறை ஏஐஜி ரவீந்திரநாத்தை சுற்றிவளைத்து, அவரை சென்னை அழைத்து வந்தனர். எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பதிவுத்துறை ஏஐஜி ரவீந்திரநாத் "இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, தினமும் நூற்றுக்கணக்கான கோப்புகளை பார்க்கிறேன். அதனடிப்படையில் குறிப்பிட்ட நிலப்பத்திரம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன். இதற்காக ஆதாயம் எதுவும் பெறவில்லை" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் போலீசார், "அப்படி கையெழுத்து போடுவதற்கு முன்பு ஃபைல்களின் உண்மை தன்மை அறிந்து கையெழுத்திட வேண்டும் என்று சொல்லி ரவீந்திரநாத்தை கைது செய்தனர்.. அதற்கு பிறகே இரவோடு இரவாக அவரை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.. சிபிசிஐடி போலீசார் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்" என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஏஐஜி அந்தஸ்தில் உள்ள ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கடந்த 2 நாட்களாகவே, தமிழக மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.